விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து, அவர்களின் வருமானம் உயர்வதற்காக தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மைக்கென்று தனியாக நிதிநிலை அறிக்கையினை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, உழவர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வந்து, கிராமங்களின் தன்னிறைவினை ஏற்படுத்தும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டம், பனை மேம்பாட்டுத் திட்டம், பாரம்பரிய நெல் இரகங்கள் மேம்பாட்டுத் திட்டம், தோட்டக்கலைக்கான பல்வேறு திட்டங்கள், வேளாண் இயந்திரமயமாக்குதல், சூரிய சக்தி பம்ப்செட்டுகள் திட்டம், 1.5 இலட்சம் வேளாண் பம்ப்செட்டுகளுக்கு மின் இணைப்பு, உழவர் சந்தைகளை புதுப்பித்தல், புதிதாக வேளாண் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்று, எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிப்பதற்கு முன்னர், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களின் கருத்துக்களைக் கேட்டு, அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப்பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் வகையில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. இதுமட்டுமல்லாது, காணொலிக் காட்சிகள் மூலமாகவும், அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்துள்ள மக்களிடமிருந்து கருத்துக்களை பெறுவதற்கு வேளாண்மை (ம) உழவர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாட்களில் விவசாயிகள் தெரிவித்துள்ள அனைத்துக் கருத்துக்களும் தொகுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாத மக்களும் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கான தீர்வு குறித்து தங்களின் கருத்துக்கள், அறிவுரைகளை கீழ்க்காணும் வழிகளில் தெரிவிக்கலாம். உழவன் செயலியில் வேளாண் நிதிநிலை அறிக்கை எனும் பக்கத்திற்கு சென்று தெரிவிக்கலாம். கடிதம் மூலம் தெரிவிப்பதற்கான முகவரி:வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) அரசுச் செயலர்வேளாண்மை (ம) உழவர் நலத்துறைதலைமைச் செயலகம், புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டைசென்னை 600 009 மின்னஞ்சல் முகவரி tnfarmersbudget@gmail.com வாட்ச் ஆப் மூலம் தகவல் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண் 9363440360 கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்றே, எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் உழவர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இத்தகைய நடவடிக்கைகளை பயன்படுத்திக்கொண்டு, வேளாண்மையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்களின் மேலான கருத்துக்களை மேற்காணும் ஊடகங்கள் வாயிலாக அரசுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9